பாகிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 80 பேர் பலி
|கனமழை பாதிப்பு அதிகம் உள்ள மாகாணங்களில் அவரசநிலை பிரகடனப்படுத்தப்பட்டு வெள்ள நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக அங்குள்ள ஜீவநதிகளான சிந்து, காபூல் உள்ளிட்ட ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கடந்த 4 நாட்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழைக்கு இதுவரை 66 பேர் பலியானதாக பேரிடர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கைபர் பக்துங்குவா மாகாணத்தில் கனமழை, கட்டிட இடிபாடு, மின்னல் விழுந்து சாவு உள்பட 46 பேர் இறந்தனர். கிழக்கு பஞ்சாபில் 21 பேர், பலூசிஸ்தானில் 10 பேர் உள்பட 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
பருவநிலை மாற்றம் காரணமாகவே பாகிஸ்தானில் கனமழை வெளுத்து வாங்குவதாகவும் பலூசிஸ்தானில் இயல்பை விட 256 சதவீதம் கனமழை பதிவாகி உள்ளதாகவும், பாகிஸ்தான் முழுவதும் 61 சதவீதம் இயல்பை மீறி மழை பெய்து உள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். கனமழை பாதிப்பு அதிகம் உள்ள மாகாணங்களில் அவரசநிலை பிரகடனப்படுத்தப்பட்டு வெள்ள நிவாரணப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், கஜகஸ்தானிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது. ஊருக்குள் வெள்ளம் புகுந்து 1200-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மிதந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. 10 ஆயிரம் குடும்பங்கள் வீடுகளை இழந்தனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் செத்தன. 63 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சேதமாகின. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானில் கனமழை காரணமாக 60 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஜகஸ்தான் நாட்டிலும் கனமழை பெய்ததால் ஆற்றோரம் அமைக்கப்பட்டிருந்த வீடுகளில் இருந்து 2 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர்.