7,200 ஆண்டுகளுக்கு முன் அதிகளவில் ஆயுத உற்பத்தியான இடம்... அது இன்றைய இஸ்ரேல்
|நாட்டின் ஹுலா வேலி மற்றும் கலிலீ ஆகிய பகுதிகளில் இருந்தும் இந்த கற்கள் கிடைக்க பெற்றுள்ளன.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஒரு மாத காலத்திற்கும் மேலாக தீவிர மோதல் ஏற்பட்டு வருகிறது. மத்திய கிழக்கு பகுதியில் இன்று நடைபெற்று வரும் போரானது 7 ஆயிரம் ஆண்டுகளை பின்னோக்கி திரும்பி பார்க்க வைத்துள்ளது.
இஸ்ரேலின் தொல்லியல் துறை இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், 7,200 ஆண்டுகளுக்கு முன் பெரிய அளவில் மற்றும் திட்டமிட்ட ஆயுத உற்பத்தியானது ஓரிடத்தில் நடந்துள்ளது. அந்த இடம் தற்போதுள்ள இஸ்ரேல் என தெரிவித்து உள்ளது.
இதற்காக கி.மு. 5,800-4,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்த காலத்தில் கிடைக்கப்பெற்ற, ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்ட 424 கற்களை ஆய்வு செய்தனர்.
வடக்கு ஷரோன் பிளைன் பகுதியில் உள்ள என் எசூர் மற்றும் லோயர் கலிலீ பகுதியில் உள்ள என் ஜிப்போரி ஆகிய இரண்டு பெரிய தொல்லியல் பகுதிகளில் இந்த வகையை சேர்ந்த கற்கள் கிடைக்க பெற்றுள்ளன.
இந்த கற்கள் நாட்டின் ஹுலா வேலி மற்றும் கலிலீ ஆகிய பகுதிகளில் இருந்தும் கிடைக்க பெற்றுள்ளன. இவற்றை சங்கிலி அல்லது கயிறு போன்றவற்றில் உபயோகப்படுத்தி தாக்குதல் நடத்த பயன்படுத்தி இருக்கின்றனர்.
ஆனால், இந்த வகை கற்கள் அதிகளவில் தொல்லியல் துறையினரால் இந்த முறை தோண்டி எடுக்கப்பட்டு உள்ளன. இந்த அளவுக்கு பெரிய எண்ணிக்கையில் இந்த வகை கற்களை உற்பத்தி செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதில் இருந்து, போருக்கு திட்டமிட்டு தயாராகி உள்ளனர் என்று தெரிய வருகிறது. இதுபற்றி குறிப்பிட்ட அந்த துறையின் இயக்குநர் எலி எஸ்கொசிடோ, வரலாறு திரும்புகிறது என தொல்லியல் துறை நமக்கு மீண்டும் கற்று தந்துள்ளது என கூறியுள்ளார்.