குவைத் தீ விபத்து: உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை
|குவைத் நாட்டில் பலியான தமிழர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசின் சார்பில் அயலக தமிழர் நல அமைச்சகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
துபாய்,
குவைத் நகரில் மங்காப் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தரைதளத்தில் சிலிண்டர் வெடித்ததில் 7 தமிழர்கள் உள்பட 49 பேர் பலியாகினர். காயமடைந்த 95-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதையடுத்து, பலியான இந்தியர்களின் உடல்களை தாயகத்திற்கு கொண்டு செல்வதற்கு குவைத் அமீர் ஷேக் மெஷால் அல் அகமது அல் ஜாபர் அல் சபா தங்கள் நாட்டு விமானத்தை அளிப்பதாக அறிவித்தார். தொடர்ந்து குவைத் நாட்டில் பலியானவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசின் சார்பில் அயலக தமிழர் நல அமைச்சகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இது குறித்து துபாயில் வசிக்கும் தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலவாரியத்தின் வளைகுடா உறுப்பினர் எஸ்.எஸ்.மீரான் கூறியதாவது:-
குவைத் நாட்டில் நிகழ்ந்த இந்த பயங்கர தீ விபத்தில் பலியானவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் ஒத்துழைப்புடன் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த சமூக பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதற்கான ஒத்துழைப்பை அயலக தமிழர் நல வாரியம் தொடர்ந்து செய்து வருகிறது.
தீ விபத்தில் பலியான தமிழர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு எளிதாக கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். அமைச்சர் செஞ்சி மஸ்தான், அயலக தமிழர் நல வாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி உள்ளிட்டோரிடம் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இறந்த 7 தமிழர்களின் உடல்களை அனுப்புதவற்கான ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை செய்து வருகிறோம்.
தீ விபத்தில் பலியானவர்கள் அனைவரும் அங்குள்ள தனியார் பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் ஆவர். இதில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 8 லட்சம் ரூபாய் வழங்குவதாக அந்த நிறுவனம் சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாகவும் அந்த நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.