கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 7 போர் விமானங்கள் எரிந்து நாசம் என தகவல்!
|கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ விமான தளத்தில் கடந்த 9ம் தேதியன்று வெடி விபத்து ஏற்பட்டது.
மாஸ்கோ,
ரஷியாவுடன் இணைந்த கிரிமியாவில் உள்ள ராணுவ விமான தளத்தில் கடந்த 9ம் தேதியன்று வெடி விபத்து ஏற்பட்டது.
உக்ரைனின் தெற்கில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்த, கிரிமியாவில் உள்ள சாகி ராணுவ விமான தளம் ரஷியாவால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அங்கு நிலைகொண்டிருந்த ரஷிய போர் விமானங்கள் இந்த பயங்கர விபத்தில் தீக்கிரையாகின.
அங்கு வெடிகுண்டுகள் வெடித்ததால் ராணுவ விமான தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், அங்கிருந்த போர் விமானங்களுக்கு சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
இந்த நிலையில், 7 விமானங்கள் எரிந்து சேதமடைந்தன என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தீ விபத்தில் ஒருவர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டது.
உக்ரேனிலிருந்து நீண்ட தூர ஏவுகணைகள் அதன் மீது ஏவப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அதை உக்ரைன் தரப்பு உறுதிபடுத்தவில்லை. ரஷிய தரப்பும் அவ்வாறான செய்திகளை மறுத்துள்ளது.