< Back
உலக செய்திகள்
பிலிப்பைன்சை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: 5 பேர் பலி
உலக செய்திகள்

பிலிப்பைன்சை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: 5 பேர் பலி

தினத்தந்தி
|
28 July 2022 5:22 AM IST

பிலிப்பைன்சை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்தில் 5 பேர் பலியாகினர்.

மணிலா,

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், பசிபிக் நெருப்பு வளையம் (பசிபிக் ரிங் ஆப் பயர்) என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அந்த நாட்டில் பயங்கர நிலநடுக்கம், புயல், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரழிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன.

இந்த நிலையில் பிலிப்பைன்சில் நேற்று ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகள் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அந்த நாட்டை கடுமையாக உலுக்கியது. பிலிப்பைன்சின் வடக்கு பகுதியில் உள்ள அப்ரா மாகாணத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியது.

மலைப்பாங்கான இடத்தில் அமைந்துள்ள அப்ரா மாகாணம் இந்த நிலநடுக்கத்தால் கடுமையாக குலுங்கியது. ரிக்டர் அளவுகோலில் 7.3 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக பிலிப்பைன்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.

உள்ளூர் நேரப்படி காலை 8:43 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் சில வினாடிகளுக்கு நீடித்தது. அப்போது அப்ரா மாகாணத்தில் உள்ள வீடுகள், கடைகள் மற்றும் வானுயர கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

மேலும் இந்த நிலநடுக்கம் அப்ரா மாகாணத்தில் பல இடங்களில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. நிலநடுக்கம் மற்றும் நிலச்சரிவால் அந்த மாகாணத்தில் வீடுகள், கடைகள், தேவாலயங்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன.

இந்த நிலநடுக்கமானது அண்டை மாகாணமான பெங்குவெட், நாட்டின் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல இடங்களிலும் உணரப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே நிலநடுக்கத்தால் இதுவரை 5 பேர் பலியானதாகவும், 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படுகாயம் அடைந்த அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.

படுகாயம் அடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக அண்மையில் பதவியேற்ற பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர், நிலநடுக்கம் தாக்கிய அப்ரா மாகாணத்துக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கடந்த 1990ம் ஆண்டு வடக்கு பிலிப்பைன்சில் ரிக்டர் அளவுகோலில் 7.7 புள்ளிகள் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 2,000 பேர் பலியானது நினைவு கூரத்தக்கது.

மேலும் செய்திகள்