எகிப்து பாலைவனத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 7 பேர் உயிரிழப்பு
|டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையில் இருந்து விலகி பாலைவனத்திற்குள் பாய்ந்து விபத்திற்குள்ளானது.
கெய்ரோ,
தெற்கு எகிப்தின் மின்யா மாகாணத்தில் உள்ள கிழக்கு பாலைவன சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்தனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து 250 கி.மீ தெற்கே மின்யா மாகாணம் அமைந்துள்ளது. பெரும்பாலும் பாலைவனம் சூழ்ந்த பகுதியாக காணப்படும் இங்கே சாலைகள் அமைத்து போக்குவரத்து வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாலைவனத்திற்கு நடுவே அமைக்கப்பட்டுள்ள சாலையில் பஸ் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அதிகாலையில் அந்த பஸ் சென்றபோது பாலைவனத்தில் குளிர்காற்று வீசியது. இதனால் அடர்த்தியான மூடுபனி உருவானது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையில் இருந்து விலகி பாலைவனத்திற்குள் பாய்ந்து விபத்திற்குள்ளானது.
இதில் பஸ்சில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 பயணிகள் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாதுகாப்பு படையினர், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.