< Back
உலக செய்திகள்
ஆப்பிரிக்க நாடான சாத் நாட்டில் அதிபர் எதிர்ப்பு போராட்டங்களில் ராணுவம் துப்பாக்கிச்சூடு; 62 பேர் கொன்று குவிப்பால் பதற்றம்
உலக செய்திகள்

ஆப்பிரிக்க நாடான சாத் நாட்டில் அதிபர் எதிர்ப்பு போராட்டங்களில் ராணுவம் துப்பாக்கிச்சூடு; 62 பேர் கொன்று குவிப்பால் பதற்றம்

தினத்தந்தி
|
21 Oct 2022 11:26 PM IST

ஆப்பிரிக்க நாடான சாத் நாட்டில் அதிபர் எதிர்ப்பு போராட்டங்களில் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. 62 பேர் கொன்று குவிக்கப்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

அதிபர் எதிர்ப்பு போராட்டம்

ஆப்பிரிக்க நாடான சாத் நாட்டின் அதிபராக 30 ஆண்டுகள் பதவி வகித்தவர் இட்ரிஸ் டெபி இட்னோ (வயது 68). இவர் ராணுவ தளபதியாகவும் பதவி வகித்தார். போராளிகளுக்கு எதிராக அவர் படையை வழிநடத்தியபோது கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ந் தேதி கொல்லப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அவரது மகனும், ராணுவ தளபதியுமான மகமத் இட்ரிஸ் டெபி (38) இடைக்கால அதிபர் ஆனார். அவரது 18 மாத பதவிக்காலம் இந்த மாதம் முடிய இருந்தது. ஆனால் சமீபத்தில் அவரது பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. இது அங்கு ஜனநாயகம் மலர்வதற்கான வாய்ப்புக்கு தடைச்சுவராக அமைந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அலைகளை உருவாக்கியது. நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினர். இது அதிபருக்கு தலைவலியாக மாறியது. ராணுவத்தைக் கொண்டு போராட்டத்தை ஒடுக்கத் தொடங்கினார்.

துப்பாக்கிச்சூடு

இந்த நிலையில் நேற்று அங்கு இதுவரை இல்லாத வகையில் போராட்டம், மாபெரும் கிளர்ச்சியாக உருவெடுத்தது. தலைநகர் நிஜாமினா, நாட்டின் 2-வது பெரிய நகரமான மவுண்டோ என பல நகரங்களில் போராட்டக்காரர்களை ஒடுக்க ராணுவம் துப்பாக்கியைக் கையில் எடுத்தது.

போராட்டக்காரர்களை குருவியைச் சுடுவது போல சுட்டுத்தள்ளினர்.

62 பேர் கொன்று குவிப்பு

இதில் தலைநகரில் 30 பேரும், மவுண்டோவில் 32 பேரும் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் குண்டுபாய்ந்து காயங்கள் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதிபர் எதிர்ப்பு போராட்டங்களில் நடந்த துப்பாக்கிச்சூடுகளில் 62 பேர் கொல்லப்பட்டிருப்பதை அரசு செய்தி தொடர்பாளர் அஜீஸ் மகமத் சலே உறுதி செய்தார். டோபா, சார் ஆகிய இடங்களிலும் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது தந்தை கொல்லப்பட்ட பிறகு மகமத் இட்ரிஸ் டெபி அதிபர் பொறுப்பேற்றதில் இருந்து நடந்த மிகக்கொடிய அதிபர் எதிர்ப்பு போராட்டங்கள் இவை என கூறுப்படுகின்றன.

கடும் கண்டனம்

பிரான்ஸ், ஆப்பிரிக்க யூனியன் உள்ளிட்ட பல நாடுகளும், அமைப்புகளும் அதிபர் எதிர்ப்பு போராட்டங்களை ஒடுக்க ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதை வன்மையாக கண்டித்துள்ளன.

ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் (சர்வதேச மன்னிப்புச்சபை) பிராந்திய இயக்குனர் சமிரா தாவூத், போராட்டக்காரர்களுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சாத் நாட்டின் அதிகாரிகளை வலியுறுத்தி உள்ளார்.

நேரில் கண்டவர்கள் பேட்டி

தலைநகரில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறும்போது, "அதிகாலை 3 மணிக்கு போராட்டக்காரர்கள் விசில் அடிக்கத்தொடங்கினார்கள். போலீசார் கண்ணீர்ப்புகைகுண்டுகளை வீசினார்கள். ஆனால் போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேறினர். அவர்களது எண்ணிக்கையும் அதிகரித்தது. அப்போது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தத்தொடங்கியது. குண்டு பாய்ந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழத்தொடங்கினார்கள். எங்கும் பதைபதைப்பு ஏற்பட்டது" என தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டவர்களில் சாத் நாட்டின் பத்திரிகையாளர் நர்சிஸ் ஓரேட்ஜேயும் அடங்குவார். தற்போது அங்கு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து பதற்றமாகவே இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்