ஜப்பானில் கடும் நிலநடுக்கம்: இடிந்து விழுந்த கட்டிடம்.. உயிரோடு புதைந்த 6 பேர்
|சுனாமி அலைகள் தாக்கியதைத் தொடர்ந்து, கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கடல்நீர் ஊருக்குள் வர தொடங்கியது.
டோக்கியோ:
ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மதியம் 12.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படலாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி விரைந்தனர்.
நிலநடுக்கம் காரணமாக பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சாலைகளில் விரிசல் மற்றும் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில நிமிடங்களில் சுனாமி அலைகள் தாக்கத் தொடங்கின. கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கடல்நீர் ஊருக்குள் வர தொடங்கியது. சுனாமி மற்றும் நிலநடுக்க பாதிப்பு தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
இதற்கிடையே நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரோடு புதைந்ததாகவும், அவர்களை மீட்கும் பணி நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இடிந்து விழுந்த கட்டிடம் தொடர்பான புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
ரஷியாவின் பசிபிக் கடற்பகுதியில், ஜப்பானுக்கு அருகில் அமைந்துள்ள பகுதிகளுக்கு ரஷிய அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.