< Back
உலக செய்திகள்
பலி எண்ணிக்கை 550-ஐ தாண்டியது
உலக செய்திகள்

பாகிஸ்தானில் வெயிலுக்கு பலி எண்ணிக்கை 550-ஐ தாண்டியது

தினத்தந்தி
|
29 Jun 2024 2:23 AM IST

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசுகிறது.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த 6 நாட்களில் வெயிலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 550-ஐ தாண்டியது. இதனால் அங்குள்ள சிந்து மாகாணத்தில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசுகிறது. குறிப்பாக அங்குள்ள சிந்து மாகாணத்தில் 50 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெயில் அளவு ஆகும்.

எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. அதேசமயம் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் சொல்லொணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.

இதற்கிடையே அதிக வெயில் காரணமாக பலருக்கு நீரிழப்பு, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டன. குறிப்பாக முதியவர்கள் இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

எனவே அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 568 பேர் கடந்த 6 நாட்களில் பலியாகி உள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இதனையடுத்து சிந்து மாகாணத்தில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இதனால் டாக்டர், நர்சு உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்பை அரசாங்கம் ரத்து செய்துள்ளது.

மேலும் வெயிலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் தற்காலிக சிறப்பு மருத்துவ முகாம்களையும் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

மேலும் செய்திகள்