சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் ஒரே ஆண்டில் 50 சதவீதம் அதிகரிப்பு
|கடந்த ஆண்டு நிலவரப்படி ஒட்டுமொத்தமாக ரூ.30,500 கோடிக்கு மேல் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் உள்ளது.
சூரிச்,
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு தொடர்பான விவரங்களை சுவிட்சர்லாந்து அரசு ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு நிலவரப்படி தங்கள் வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் வைப்புத்தொகை குறித்து தற்போது தகவல் அளித்து உள்ளது.
அதன்படி, கடந்த ஆண்டு நிலவரப்படி ஒட்டுமொத்தமாக ரூ.30,500 கோடிக்கு மேல் இந்தியர்களின் பணம் சுவிஸ் வங்கிகளில் உள்ளது. இது முந்தைய 2020-ம் ஆண்டை ஒப்பிடுகையில் (ரூ.20,700 கோடி) சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அதிகம் ஆகும்.
அந்தவகையில் ஒரு ஆண்டில் மட்டுமே 50 சதவீத அளவுக்கு இந்தியர்களின் தொகை அதிகரித்து இருக்கிறது. மேலும் இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம் ஆகும்.
இதைத்தவிர சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் சேமிப்பு அல்லது டெபாசிட் கணக்குகளில் வைத்திருக்கும் பணமும் 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுமார் ரூ.4,800 கோடியாக உயர்ந்துள்ளதாக சுவிட்சர்லாந்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.