சட்டென கீழ்நோக்கி பாய்ந்த விமானம்.. சீலிங்கில் முட்டி மோதி 50 பயணிகள் காயம்
|சீட்பெல்ட் அணியாமல் இருந்த பயணிகள், அவர்களின் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டு சீலிங்கில் முட்டி மோதினர்.
சிட்னி:
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நோக்கி, சிலி நாட்டின் லாதம் ஏர்லைன்ஸ் விமானம் இன்று புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது சட்டென அதன் உயரம் குறைந்து, கீழ்நோக்கி பாய்ந்தது. இதனால் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் நிலைகுலைந்து அங்குமிங்கும் முட்டி மோதினர். சிலர் சீலிங்கில் மோதினர். குறிப்பாக, சீட்பெல்ட் அணியாமல் இருந்த பயணிகள், அவர்களின் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டு சீலிங்கில் முட்டி மோதினர்.
எதிர்பாராமல் நடந்த இந்த நிகழ்வால் சுமார் 50 பயணிகள் காயமடைந்தனர். சிலருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. பின்னர் சில நிமிடங்களில் நிலைமை சீரானது. சரியான உயரத்தில் பறக்கத் தொடங்கிய விமானம், திட்டமிட்டபடி ஆக்லாந்தில் தரையிறங்கியது.
லேசான காயம் அடைந்த பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பலத்த காயமடைந்த பயணிகள் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒரு பயணியின் உடல்நிலை மட்டும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தொழில்நுட்ப பின்னடைவு காரணமாக விமானம் இவ்வாறு திடீரென கட்டுப்பாட்டை இழந்து சென்றதாக விமான நிறுவனம் கூறியிருக்கிறது. ஆனால் என்ன பிரச்சினை? என்பதை விளக்கமாக தெரிவிக்கவில்லை.