< Back
உலக செய்திகள்
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

File image

உலக செய்திகள்

காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு

தினத்தந்தி
|
2 July 2024 3:09 PM IST

காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் வழித் தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

காசா,

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் அரசு போர் அறிவித்தது. இதுவரை ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100-க்கும் மேற்பட்டோரை இஸ்ரேல் மீட்டுள்ளது. தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக அழிக்கும் நோக்கில் காசாவில் உள்ள பல்வேறு பகுதிகளின் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் இதுவரை சுமார் 37 ஆயிரம் பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், காசா நகரின் அல்-ஜலா தெருவை நோக்கி இஸ்ரேல் ராணுவம் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ பேஸ்புக்கில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் காசா பகுதிக்கு தெற்கே உள்ள கிழக்கு கான் யூனிசில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சாய் அட்ரே தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கான் யூனிசின் கிழக்கே உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களை உடனடியாக மனிதாபிமான மண்டலத்திற்கு வெளியேற்றுமாறு வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்