< Back
உலக செய்திகள்
காசாவில் இஸ்ரேல் விமான தாக்குதல்.. 5 என்.ஜி.ஓ. ஊழியர்கள் பலி
உலக செய்திகள்

காசாவில் இஸ்ரேல் விமான தாக்குதல்.. 5 என்.ஜி.ஓ. ஊழியர்கள் பலி

தினத்தந்தி
|
2 April 2024 2:39 PM IST

இறந்தவர்களில் 4 பேர் வெளிநாட்டு ஊழியர்கள், ஒருவர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் முன்னெப்போதும் இல்லாத வகையில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. காசா மீதான தாக்குதலை விரிவுபடுத்திய இஸ்ரேல், காசாவின் பெரும்பாலான பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அங்கிருந்த ஹமாஸ் அமைப்பினர், அப்பாவி மக்கள் என ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் காசாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டு, மக்கள் பசி-பட்டினியால் வாடுகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச அமைப்புகள் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், மத்திய காசாவில் உள்ள டேர் அல்-பலாஹ் நகரில் நேற்று இரவு இஸ்ரேல் விமான தாக்குதல் நடத்தியது. அப்போது அரசு சாரா தொண்டு நிறுவனமான வேர்ல்டு சென்ட்ரல் கிச்சன் (WCK) அமைப்பைச் சேர்ந்தவர்கள் சென்ற கார் மீது குண்டு விழுந்தது. இதில், காரில் இருந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் 5 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள ஹமாஸ் அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களில் 4 பேர் வெளிநாட்டு ஊழியர்கள், ஒருவர் பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் அனைவரும், உதவிப்பொருட்கள் வந்து இறங்கும் துறைமுகத்தை ஆய்வு செய்யும் பணியில் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த துயர சம்பவம் தொடர்பாக முழுமையான ஆய்வு நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்