< Back
உலக செய்திகள்
உலக செய்திகள்
சிலியில் ஹெலிகாப்டர் வெடித்து 5 விமானப்படை வீரர்கள் பலி
|3 Aug 2023 12:58 AM IST
சிலியில் ஹெலிகாப்டர் வெடித்து 5 விமானப்படை வீரர்கள் பலியாகினர்.
சான் டியாகோ,
தென் அமெரிக்க நாடான சிலியின் தெற்கே லாஸ் லகோஸ் நகரம் அமைந்துள்ளது. அந்த நாட்டின் விமானப்படை தளம் ஒன்று இங்கு செயல்படுகிறது. இந்த தளத்தில் இருந்து இரவுநேர பயிற்சிக்காக ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது.
வானில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டரில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 2 விமானிகள், 2 விமானப்படை வீரர்கள் மற்றும் சிறப்புப்படை வீரர் ஒருவர் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இது குறித்து ராணுவத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.