ஈரானில் ஹிஜாப் போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிரம்: 60க்கும் அதிகமான பெண்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!
|ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களில் இதுவரை குறைந்தபட்சம் 41 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.
தெஹ்ரான்,
ஈரான் நாட்டில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறு போலீசார் தாக்கியதில் இளம்பெண் மாஷா உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்கைப், பேஸ்புக், டுவிட்டர், டிக்-டாக் மற்றும் டெலிகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டு இணையதள சேவை தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று மேலும் 450 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக ஈரான் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், சீர்திருத்த ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரான் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானின் வடக்கு மாகாண தலைமை வழக்குரைஞர் முகமது கரிமி கூறியிருப்பதாவது, "வடக்கு ஈரான் மாகாணத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்த போராட்டங்களில் 450 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் மசாந்தரன் பகுதியின் பல பகுதிகளில் அரசாங்க கட்டிடங்களைத் தாக்கியுள்ளனர் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியுள்ளனர். அவர்கள் வெளிநாட்டு முகவர்களால் வழிநடத்தப்பட்டனர்" என்று தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள் ஆட்சிக்கு எதிராக முழக்கங்களை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்று, அண்டை மாநிலமான குய்லான் மாகாணத்தில் உள்ள அதிகாரிகள் கூறுகையில், "60 பெண்கள் உட்பட 739 பேர் கைது செய்யப்பட்டதாக" அறிவித்தனர்.
ஈரானின் நீதித்துறை தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி எஜே கூறுகையில், "கலவரங்களை தூண்டும் முக்கிய போராட்டக்காரர்களுக்கும் அவர்களின் தூண்டுதல்களுக்கும் எதிராக மென்மையின்றி, தீர்க்கமான நடவடிக்கை அவசியம்" என்று வலியுறுத்தினார். ஈரான் அதிபரின் பேச்சை பிரதிபலிப்பதாக இது உள்ளது.
மேலும், போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள் உள்ளிட்டோர் மீது போலீசார், பாதுகாப்பு படையினர் கடுமையான தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
போராட்டத்தில் குறைந்தது 41 பேர் இறந்துள்ளனர், அதில் பெரும்பாலானோர் போராட்டக்காரர்கள் என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும், போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம் என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.