< Back
உலக செய்திகள்
பாகிஸ்தானில் 45 பெண்கள் பலாத்காரம்; பள்ளி முதல்வருக்கு எதிராக 2 பெண்கள் சாட்சியம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் 45 பெண்கள் பலாத்காரம்; பள்ளி முதல்வருக்கு எதிராக 2 பெண்கள் சாட்சியம்

தினத்தந்தி
|
13 Sept 2023 10:02 PM IST

பாகிஸ்தானில் வேலை தருகிறேன் என கூறி 45 பெண்களை பலாத்காரம் செய்த பள்ளி முதல்வருக்கு எதிராக 2 பெண்கள் சாட்சியம் அளித்தனர்.

கராச்சி,

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் குல்ஷான்-இ-ஹதீத் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் உரிமையாளர் மற்றும் முதல்வராக இருப்பவர் 45 பெண்களை பலாத்காரம் செய்துள்ளார் என பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றிய வீடியோ ஒன்றும் சமூக ஊடகத்தில் கடந்த 4-ந்தேதி வைரலானது. இதனை தொடர்ந்து, பள்ளி முதல்வருக்கு எதிராக 2 பெண்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.

அதில், வேலை தருகிறேன் என கூறி அழைத்து, பின்னர் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாகவும் பதிவு செய்து தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார் என நீதிபதியின் முன் வாக்குமூலம் அளித்தனர்.

குற்றவாளி இருக்கும்போதே, இரண்டு பெண்களும் தனித்தனியாக தங்களுடைய வாக்குமூலங்களை பதிவு செய்தனர். அவர்கள் பள்ளி முதல்வரை அடையாளம் காட்டியதுடன், தொடர்ந்து பலமுறை பலாத்காரத்தில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டு கூறினர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வருக்கு எதிராக நீதிபதி ரம்ஷா நவைத் முன் சாட்சியம் அளிக்கப்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட 23 வயது பெண்ணை, பள்ளி நேரம் முடிந்ததும் நேர்காணலுக்கு வரும்படி முதல்வர் கூறியுள்ளார்.

இதன்படி, சென்ற அந்த பெண்ணை, முதல்வரின் அலுவலகத்தில் அமரும்படி அவர் கூறியுள்ளார். அதன்பின்பு, கதவை பூட்டி விட்டு, கட்டாயப்படுத்தி பலாத்காரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

அதன்பின்பு, ஒரு வாரம் கழித்து வந்து வேலையில் சேரும்படி கூறியுள்ளார். பாகிஸ்தான் பணத்தில் 25 ஆயிரம் சம்பளம் தரப்படும் என்றும் கூறியுள்ளார்.

ஒரு வாரம் கழித்து அந்த பெண் பள்ளிக்கு சென்றபோது, மீண்டும் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அந்த பெண் தடுக்க முற்பட்டுள்ளார். ஆனால், அவரை அடித்து, துன்புறுத்தி அலுவலகத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் காட்சிகள் பதிவாகி உள்ளன என்று கூறியுள்ளார். இணையதளத்தில் இதனை வெளியிட்டு விடுவேன் என்று எச்சரிக்கையும் விடுத்து உள்ளார் என்று நீதிபதியிடம் அந்த பெண் கூறியுள்ளார்.

அந்த பள்ளி முதல்வர் 45 பேரை இதுபோன்று பலாத்காரம் செய்துள்ளார் என போலீசார் முன்பு தெரிவித்து இருந்தனர். அவருக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்