ரஷியா: இசை நிகழ்ச்சியின்போது துப்பாக்கிச்சூடு தாக்குதல் - 40 பேர் பலி
|ரஷியாவில் இசை நிகழ்ச்சியின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 40 பேர் உயிரிழந்தனர்.
மாஸ்கோ,
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கிரோகஸ் சிட்டி அரங்கு உள்ளது. இந்த அரங்கில் இன்று பிரபல பிகினிக் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. வெடிகுண்டுகள் வீசப்பட்டும், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டும் தாக்குதல் அரங்கேறியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இசை நிகழ்ச்சி நடைபெறவிருந்த அரங்கு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
தாக்குதல் குறித்து அறிந்த போலீசார், மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 2க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார்? எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த தேர்தலில் புதின் வெற்றிபெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் ரஷியாவில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.