காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 பேர் பலி; 60 பேர் காயம்
|தாக்குதல் நடத்தப்பட்ட கான் யூனிஸ் பகுதியில் ஹமாஸ் பயங்கரவாதிகள் செயல்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா,
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டது என்னவோ காசா பகுதியில் வசிக்கும் பொதுமக்கள்தான். காசா மீது இடைவிடாமல் நடத்தப்படும் தாக்குதல்களால் அங்கு வாழும் பாலஸ்தீன மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை காசாவின் முக்கிய தெற்கு நகரமான கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 60 பேர் காயமடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கான் யூனிஸ் பகுதி போரின் ஆரம்பத்தில் இருந்து இஸ்ரேல் ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
இது குறித்து காசா பாதுகாப்பு படை அதிகாரி முகமது அல்-முகைர், காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. காணாமல் போன 15 பேரை மீட்பதற்காக எங்கள் குழுவினர் இன்னும் பணியாற்றி வருகின்றனர். 20 முதல் 40க்கும் மேற்பட்ட கூடாரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன என்றார். இந்த போரின் மிக கொடூரமான படுகொலைகளில் இதுவும் ஒன்று என்று தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் கூறப்படுவதாவது:-
கான் யூனிசில் தாக்குதலுக்கு அப்பாற்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களில் இருந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் செயல்பட்டதாகவும் அவர்களைக் குறிவைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர். பாதுகாப்பு மண்டலத்தில் இருந்த இந்த பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் உயிரிழப்பதைத் தடுக்க இஸ்ரேல் தேவையான நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.