உக்ரைன் எல்லை அருகே 4 ரஷிய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்
|ரஷிய படையைச் சேர்ந்த 2 போர் விமானங்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கீவ்,
உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. ஒரு ஆண்டுக்கு மேலாக நீடித்து வரும் இந்த போரில், உக்ரைனில் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றியது. அதே சமயம் உக்ரைன் ராணுவமும் ரஷிய படைகளை எதிர்த்து கடுமையாக போரிட்டு வருகிறது.
இந்த நிலையில் உக்ரைன் எல்லையையொட்டியுள்ள தெற்கு ரஷிய பிராந்தியத்தின் பிரையன்ஸ்க் பகுதியில் இரண்டு எம்.ஐ.-8 ரஷிய ஹெலிகாப்டர்கள், சு-35 போர் விமானம் மற்றும் சு-34 போர் விமானம் ஆகியவை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தெற்கு உக்ரைனில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள ஜபோரிஜியா பகுதியின் அதிகாரியான விளாடிமிர் ரோகோவ் கூறும்போது, "நான்கு ரஷிய விமானங்கள் வானத்தில் இருந்து சுடப்பட்டது. ஹெலிகாப்டர்கள் மற்றும் சு-34 விமானத்தில் இருந்த வீரர்கள் உயிரிழந்தனர்" என்றார். இதை உக்ரைன் தரப்பும் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.