எல்லைப்பகுதியில் ஈரான் ராணுவம் துப்பாக்கி சூடு.. 4 பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு
|பாகிஸ்தான் பகுதியில் ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கராச்சி:
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் மஷ்கில் பச்சா ராய் என்ற பகுதி ஈரான் எல்லையை ஒட்டி உள்ளது. இந்த எல்லை நகரம் பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கு பாதுகாப்பு ரீதியாக முக்கியமான இடமாக கருதப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கூறி, இரு நாடுகளும் பதிலுக்குப் பதில் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. முதலில், பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததாக கூறப்படும் பகுதியில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது ஈரான்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் துல்லிய தாக்குதல்களை நடத்தியது பாகிஸ்தான். டிரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி நடத்திய இந்த தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே நேரடி சண்டை ஏற்படும் சூழல் உருவானது. இருப்பினும், இருதரப்பும் தூதரக பேச்சுவார்த்தைகள்மூலம் பிரச்சினையை முடிவுக்கு கெண்டு வந்தன.
இந்நிலையில், மஷ்கில் பச்சா ராய் நகரில் சென்ற ஒரு வாகனத்தை குறிவைத்து ஈரான் பாதுகாப்பு படைகள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். நேற்று நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில், 4 பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டதாகவும், 2 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எல்லையில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பாக ஈரான் ராணுவத்திடம் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர். ஆனால் அவர்கள் இதுவரை எந்தவிளக்கமும் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.