பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு - 4 பேர் பலி
|பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் நாளுக்குநாள் துப்பாக்கி சூடு, கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு கரோலினா மாகாணம் கென்டகி நகரில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு 21 வயது இளைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அப்போது, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நபர் திடீரென தான் கொண்டுவந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டார்.
இந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய இளைஞரை தேடிய நிலையில் அவர் அருகில் உள்ள வனப்பகுதியில் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த இளைஞரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.