சீனா, ஈரான் உள்பட 4 நாடுகள் அச்சுறுத்தலாக இருக்கும்; அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை
|சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து அச்சுறுத்தல்கள் இருக்கும் என அமெரிக்க புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான வருடாந்திர அச்சுறுத்தல் ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த அறிக்கையில், சீனா, ரஷியா, வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு தீவிர அச்சுறுத்தலாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்து உள்ளது.
கிழக்கு ஆசியாவில் முக்கிய சக்தி வாய்ந்த ஒன்றாகவும், உலக அரங்கில் பெரிய ஆற்றல் வாய்ந்த நாடாகவும் சீனா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வளர்ந்து வரும் சக்தியாக உள்ள சீனாவை எதிர்கொள்வதற்கான முக்கிய சவால்கள் உள்ளன.
இதேபோன்று, சிப் எனப்படும் பொருட்கள் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வரும் தைவான் நாட்டை தன்னுடன் ஒருங்கிணைக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருவதும் சவால்களில் ஒன்றாக இருக்கும்.
உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை அதிகரிப்பதுடன், பேரழிவை உண்டாக்கும் ஆயுதங்கள், கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்க கூடிய பல நூறு ஏவுகணைகளையும் சீனா தயாரித்து வருகிறது என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
ரஷியா அடுத்த 10 ஆண்டுகளுக்கு முக்கிய விசயங்களில் அதிகம் கணிக்க முடியாத அளவுக்கு சவாலாக இருக்கும்.
இதன்படி, அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுடன் நேரடியான ராணுவ மோதலை ரஷியா விரும்பாது என்ற போதிலும், அது நடப்பதற்கான சாத்தியமும் உள்ளது.
சீனா, ரஷியா இடையேயான உறவால், பாதுகாப்பு ஒருங்கிணைப்பு, ஆயுத விற்பனைகள் மற்றும் கூட்டு பயிற்சிகள் போன்றவற்றில் அமெரிக்காவுக்கு எதிரான ஆற்றல் வாய்ந்த அச்சுறுத்தலாக உள்ளன.
அந்த இரு நாடுகளும் அமெரிக்காவுக்கு எதிரான நலன்களில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தங்களது வீட்டோ அதிகாரங்களை பயன்படுத்தி உள்ளன.
ஈரான் நாடும், தொடர்ந்து அமெரிக்க மக்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கும். ஹேக்கர்கள் துணையுடன் வலைதள தாக்குதல்களில் ஈடுபடும் சாத்தியம் அதிகம் உள்ளது.
அணு ஆயுத வளர்ச்சி நடவடிக்கைகளில் அந்நாடு தற்போது ஈடுபடவில்லை என்றபோதிலும், தனது அணு ஆயுத திட்டங்களை விரிவுப்படுத்தி உள்ளது என்றும் எச்சரித்து உள்ளது.
வடகொரிய ராணுவமும் தனது அணு ஆயுத திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வந்து, அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு தீவிர அச்சுறுத்தலாக உள்ளது என்று அறிக்கை எச்சரிக்கை விடுத்து உள்ளது.