< Back
உலக செய்திகள்
ஜப்பானில் 3-வது முறையாக நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவு
உலக செய்திகள்

ஜப்பானில் 3-வது முறையாக நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவு

தினத்தந்தி
|
6 April 2024 8:11 AM IST

ஜப்பானின் ஹோன்ஷு நகரில் 3-வது முறையாக இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

டோக்கியோ,

தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் கடந்த 3-ம் தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. இதனை தைவான் நாட்டு மத்திய வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தது. நிலம் மற்றும் நீர் பரப்பை ஒட்டிய பகுதியில் உணரப்பட்ட இந்நிலநடுக்கம் 35 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. எனினும், அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு அமைப்பு வெளியிட்ட செய்தியில், நிலநடுக்கம் ரிக்டரில் 7.4 ஆக பதிவாகி உள்ளது என தெரிவித்தது. இந்நிலநடுக்கம் ரிக்டரில் 7.7 ஆக பதிவாகி உள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்து இருந்தது.

தைவானில், 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு, 9 பேர் உயிரிழந்தனர். 1,000-த்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அலைகள் 3 மீட்டர் உயரத்திற்கு கடலில் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டது.

அந்நாட்டின் ஒகினவா மாகாணத்தின் தெற்கே கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறுவதற்கான அறிவுறுத்தல்களும் வெளியிடப்பட்டன. பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலநடுக்கம், சீனா, ஹாங்காங், ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது. வருகிற நாட்களில் அதிக அளவில் நிலநடுக்க அதிர்வுகள் ஏற்படலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த சூழலில், ஜப்பான் நாட்டின் ஹோன்ஷு கிழக்கு கடலோர பகுதியில் 2-வது முறையாக கடந்த 4-ம் தேதி காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் 32 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து இருந்தது. எனினும், இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

இந்நிலையில், ஜப்பானின் ஹோன்ஷு நகரில் 3-வது முறையாக இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . இது ரிக்டர் அளவில் 5.4ஆக பதிவாகி உள்ளது.

மேலும் செய்திகள்