சீனாவில் இரண்டு வெவ்வேறு இடங்களில் தீ விபத்து: 32 பேர் பலியான சோகம்
|சீனாவில் இரண்டு வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 32 பேர் பலியாகினர்.
பீஜிங்,
சீனாவில் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை ஆகிய இடங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பீஜிங்கின் பெங்டாய் மாவட்டத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். சுமார் 2 மணி நேரம் நடந்த மீட்பு பணியில் 71 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு, வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதேபோல் கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஜின்ஹுவா நகரில் உள்ள தொழிற்சாலையில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. எனவே இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் அந்த தொழிற்சாலை கட்டிடத்தின் 3-வது மாடியில் காயம் அடைந்து பலர் சிக்கி கொண்டனர். எனவே அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.