< Back
உலக செய்திகள்
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 31 பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு
உலக செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 31 பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு

தினத்தந்தி
|
31 Oct 2023 2:47 PM IST

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போரில் 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து, அந்த பகுதியில் தங்கியிருந்தவர்களை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டது.

இந்த சம்பவத்தில், 260 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அந்த அமைப்பு 210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. அவர்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது.

25-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் இன்றும் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், போர் பற்றிய விவரங்களை கொண்டு வருவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் பத்திரிகையாளர்களை அனுப்பி வைத்துள்ளன.

எனினும் போரால், அதில் சிக்கி இதுவரை 31 பத்திரிகையாளர்கள் உயிரிழந்து உள்ளனர் என தி டைம்ஸ் ஆப் இஸ்ரேல் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

அந்த 31 பத்திரிகையாளர்களில் 26 பேர் பாலஸ்தீனர்கள் ஆவர். இவர்களை அடுத்து 4 இஸ்ரேல் நாட்டினர் மற்றும் ஒரு லெபனான் பத்திரிகையாளரும் உயிரிழந்து உள்ளனர்.

இதுதவிர, பத்திரிகையாளர்களில் 8 பேர் காயமடைந்து உள்ளனர். 9 பேர் காணாமலோ அல்லது சிறை பிடிக்கப்பட்டோ உள்ளனர் என்றும் அந்த செய்தி தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்