< Back
உலக செய்திகள்
கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்.. முதல் முறையாக உயிர்ப்பலியை ஏற்படுத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
உலக செய்திகள்

கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்.. முதல் முறையாக உயிர்ப்பலியை ஏற்படுத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

தினத்தந்தி
|
7 March 2024 2:01 PM IST

ஹவுதிகளின் பொறுப்பற்ற தாக்குதல்கள் சர்வதேச கப்பல் ஊழியர்களின் உயிரை பறித்திருப்பதாக அமெரிக்க ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் சண்டை முன்னெப்போதும் இல்லாத வகையில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த போரில் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கி உள்ள ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் வழியாக பயணிக்கும் வர்த்தக கப்பல்களை குறிவைத்து, கடந்த நவம்பர் மாதம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு தாங்கள் ஆதரவாக இருப்பதாகவும், இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் ஹவுதி அமைப்பு வலியுறுத்துகிறது.

இஸ்ரேல், பிரிட்டன், அமெரிக்க கப்பல்கள் மற்றும் இஸ்ரேலிய துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களை தாக்குவதாக ஹவுதி அமைப்பினர் தெரிவிக்கின்றனர். ஏமன் கடற்கரையில் இருந்து நடத்தப்படும் இந்த தாக்குதல் காரணமாக, முக்கிய வர்த்தக பாதைகளில் போக்குவரத்து சீர்குலைந்துள்ளது.

கப்பல் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்காவும் பிரிட்டனும் ஏமனில் உள்ள ஹவுதி இலக்குகள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்துகின்றன. ஆனாலும், பின்வாங்காத ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வணிக கப்பல்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அவர்களின் தாக்குதலில் சேதமடைந்த ரூபிமார் என்ற சரக்கு கப்பல், 21 ஆயிரம் டன் எடையுள்ள அமோனியம் பாஸ்பேட் சல்வேட் உரத்துடன் கடந்த சனிக்கிழமை மூழ்கியது.

இந்நிலையில், ஏடன் வளைகுடா பாதையில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கப்பல் கடுமையாக சேதமடைந்துள்ளது.

லைபீரியாவிற்கு சொந்தமான எம்/வி ட்ரூ கான்பிடன்ஸ் என்ற சரக்கு கப்பல் மீது, கப்பல் எதிர்ப்பு ஏவுகணை தாக்கியதாகவும், கப்பலில் இருந்த மூன்று மாலுமிகள் உயிரிழந்ததாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதலில் முதல் முறையாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

ஹவுதிகளின் பொறுப்பற்ற தாக்குதல்கள் சர்வதேச வர்த்தகத்தை சீர்குலைத்துள்ளதுடன், இப்போது சர்வதேச கப்பல் ஊழியர்களின் உயிரை பறித்திருப்பதாக அமெரிக்க ராணுவம் குற்றம்சாட்டி உள்ளது.

எச்சரிக்கையை மீறி, முன்னேறி வந்ததால் ட்ரூ கான்பிடன்ஸ் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹ்யா சாரீ, சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்