ஹமாஸ் படுகொலைக்கு 4-ல் 3 பாலஸ்தீனியர்கள் ஆதரவு; ஆய்வில் அதிர்ச்சி தகவல்
|தெற்கு காசா முனை, ஜூடியா மற்றும் சமரியா உள்ளிட்ட பகுதிகளில் 668 பாலஸ்தீனியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
டெல் அவிவ்,
இஸ்ரேல் மீது அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியையும் சூறையாடியது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். இதுதவிர, இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டு உள்ளனர். அவர்களை மீட்கும் தீவிர பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது. இதற்காக, தரைவழி தாக்குதலையும் முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய பயங்கரவாத தாக்குதலுக்கு 4-ல் 3 பாலஸ்தீனியர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
ரமல்லாவை அடிப்படையாக கொண்ட ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான அரபு உலகம் என்ற ஆய்வு நிறுவனம் ஒன்று நடத்திய சர்வேயில், திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதன்படி, கடந்த அக்டோபர் 31-ந்தேதி மற்றும் நவம்பர் 7-ந்தேதிக்கு இடையே தெற்கு காசா முனை, ஜூடியா மற்றும் சமரியா உள்ளிட்ட பகுதிகளில் 668 பாலஸ்தீனியர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 48.2 சதவீதத்தினர் ஹமாஸின் பங்கு மிக நேர்மறையானது என்றும், 27.8 சதவீதத்தினர் ஹமாஸின் பங்கு எப்படியோ நேர்மறையானது என்றும் தெரிவித்தனர்.
ஏறக்குறைய 80 சதவீதத்தினர் ஹமாஸின் அல்-காசம் ராணுவ அமைப்பின் செயல்பாட்டை நேர்மறையானது என்று தெரிவித்து உள்ளனர்.