காசாவில் இருந்து மக்கள் வெளியேற 3 மணி நேரம் கால அவகாசம் - இஸ்ரேல்
|காசாவில் இருந்து மக்கள் வெளியேற 3 மணி நேரம் பாதைகளை திறந்து இஸ்ரேல் கால அவகாசம் வழங்கியுள்ளது.
ஜெருசலேம்,
இஸ்ரேல் மீது காசாவின் ஒரு பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் அரசும் பதிலடி கொடுத்து வருகிறது. இதன்படி, இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் களமிறக்கப்பட்டு உள்ளன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அந்த நாட்டுக்கு ஆதரவாக ஆயுத உதவி போன்றவற்றை செய்து வருகின்றன.
ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது என கூறப்படுகிறது. இந்த சண்டையில், பெண்கள், குழந்தைகள் உள்பட இருதரப்பிலும் பொதுமக்கள், வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தும் உள்ளனர்.
இதில் காசாவில் இருந்து மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் தொடர்ந்து கூறிவந்தது. இந்நிலையில் காசாவில் இருந்து வெளியேற வழங்கிய காலக்கெடு முடியவுள்ளது. எனவே வட காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற பாதைகளை இஸ்ரேல் ராணுவம் திறந்துள்ளது.
இதற்காக பைட்- கலோன் மற்றும் கான்-யூனிஸ் வழித்தடங்களில் எந்த தாக்குதலும் நடத்தப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வட காசாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறிவருகின்றனர். மேலும் எகிப்து எல்லையில் ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர்.
காசாவில் இருந்து இதுவரை சுமார் 1 லட்சத்திற்கும் குறைவான மக்களே வெளியேறியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் காசாவில் இருந்து மக்களை வெளியேற விடாமல் ஹமாஸ் குழுவினர் தடுத்து வருவதாக இஸ்ரேல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.