< Back
உலக செய்திகள்
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உள்பட 29 பேர் பலி
உலக செய்திகள்

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உள்பட 29 பேர் பலி

தினத்தந்தி
|
6 July 2024 7:08 PM IST

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் உள்பட 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசா,

காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் ஹமாஸ் அமைப்பினர் மட்டுமின்றி, ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர். சர்வதேச அளவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையிலும், இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் காசா முனையில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 29 பேர் பலியாகி உள்ளதாக காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் 5 பேர் பத்திரிகையாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த தாக்குதலில் 100 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா முனையில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை மொத்தம் 38,098 பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 87,705 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே சமயம் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 158 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்