தெற்கு சூடானில் போப் ஆண்டவரின் வருகைக்கு முன்னதாக நடந்த தாக்குதலில் 27 பேர் பலி
|தெற்கு சூடானில் போப் ஆண்டவரின் வருகைக்கு முன்னதாக நடந்த தாக்குதலில் 27 பேர் பலியாகினர்.
தெற்கு சூடான், கடந்த 2011-ம் ஆண்டு சூடானில் இருந்து சுதந்திரம் அடைந்து, தனிநாடாக உருவெடுத்தது. ஆனால் சிறிது காலத்திலேயே அங்கு உள்நாட்டு போர் வெடித்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். 2018-ம் ஆண்டில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தபோதும், அங்கு வன்முறைகள் ஓய்ந்தபாடில்லை. ஆயுதம் ஏந்திய போராளி குழுக்கள் மற்றும் போட்டி இன குழுக்கள் நாடு முழுவதும் வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன.
இந்த நிலையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் 3 நாள் பயணமாக நேற்று தெற்கு சூடான் சென்றார். அவரது வருகையையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. இதனிடையே போப் ஆண்டவரின் வருகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக தெற்கு சூடானில் நடந்த கொடூர தாக்குதலில் அப்பாவி மக்கள் 27 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாட்டின் மத்திய பகுதியில் ஈக்வடோரியா மாகாணத்தின் கஜோ-கேஜி நகரில் உள்ள கால்நடை பண்ணைக்குள் புகுந்த ஆயுதம் ஏந்திய கும்பல் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சுட்டதோடு, கூர்மையான ஆயுதங்களால் வெட்டி சாய்தது. இந்த கொடூர தாக்குதலில் பல பெண்கள் உள்பட 27 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.