< Back
உலக செய்திகள்

உலக செய்திகள்
சோமாலியாவில் திடீர் வெள்ளப்பெருக்கால் 21 பேர் பலி

5 April 2023 4:47 AM IST
சோமாலியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 21 பேர் பலியாகினர்.
மொகாதிசு,
ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா கடுமையான வறட்சி நிலவும் நாடுகளுள் ஒன்றாகும். இங்கு கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள ஷபெல்லே மற்றும் ஜூபா நதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளப்பெருக்கால் பல வீடுகள், பள்ளி கட்டிடங்கள் சேதம் அடைந்தன. எனவே 1 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது பகுதிகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் இதுவரை 21 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட சோமாலியாவுக்கு இந்த கனமழையானது ஓரளவு நிவாரணம் அளிக்கும் என்றாலும் தற்சமயம் அது ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீள சில நாட்கள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.