போர்ச்சுக்கலில் மத மையத்துக்குள் புகுந்து கத்திக்குத்து - 2 பெண்கள் பலி
|போர்ச்சுக்கலில் மத மையத்துக்குள் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் 2 பெண்கள் பலியாகினர்.
லிஸ்பன்,
போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் முஸ்லிம் மதத்தின் ஒரு பிரிவான இஸ்மாயிலி முஸ்லிம்களுக்கான மத மையம் ஒன்று உள்ளது. இந்த மையத்துக்குள் நேற்று முன்தினம் பெரிய கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை சரமாரியாக குத்தினார். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. மத மையத்துக்குள் இருந்த அனைவரும் அலறியடித்துக்கொண்டு நாலா புறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த கொடூர தாக்குதலில் 2 பெண்கள் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர்.
இதனிடையே இந்த தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் மத மையத்துக்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபரை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். அதைத்தொடர்ந்து, கத்தியை கீழே போட்டுவிட்டு சரணடைந்துவிடும் அவரை போலீசார் எச்சரித்தனர்.
ஆனால் அவர் போலீசாரையும் கத்தியால் குத்த முயன்றார். இதையடுத்து, போலீசார் அவரது காலில் சுட்டனர். இதில் அவர் சுருண்டு விழுந்தார். அதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.