மியான்மரில் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை- எல்லை நகரத்தில் பதற்றம்
|மியான்மரில் 2 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதனால் எல்லை நகரத்தில் பதற்றம் நிலவுகிறது.
மோரே,
மணிப்பூர் மாநிலத்தில் மோேர என்ற நகரம், மியான்மர் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த நகரம், தென் கிழக்கு ஆசியாவின் வாசல் என அழைக்கப்படுகிறது. மியான்மரில் இருந்து நாடு திரும்பிய தமிழர்கள் நிறைய பேர் இங்கு வசிக்கிறார்கள். இங்கு தமிழ் கலாசாரம், பண்பாட்டுக்கூறுகளை காண முடியும்.
இங்கு வசித்து வந்தவர்கள், பெருமாள் மகன் மோகன் ((வயது 28), முருகா மகன் அய்யனார் (35).
இவர்களில் மோகன் ஆட்டோ டிரைவர். இவர் புதுமாப்பிள்ளை. கடந்த மாதம் 9-ந் தேதிதான் இவருக்கு திருமணம் நடந்தது. அய்யனார் சிறிய கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் மோரேயில் இருந்து 4 கி.மீ. தொலைவில் மியான்மரில் உள்ள தமுவுக்கு சென்றுள்ளனர். அங்கு மதியம் சுமார் 12.30 மணி அளவில் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டு பிணமாக கிடந்தது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுபற்றி மியான்மர் தமிழ் சங்கத்தினர் கூறியதாவது:-
சுட்டுக்கொல்லப்பட்டுள்ள இருவரும் எதிர்பாராதவிதமாக மியான்மரில் நுழைந்துள்ளனர். அவர்கள் உளவாளிகள் என நினைத்து ராணுவம் சுட்டுக்கொன்றுள்ளது. ஒவ்வொரு நாளும் இங்கே ராணுவம் கொலைகளை அரங்கேற்றி வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள்படி, மியான்மரில் ஆட்சியை ராணுவம் கவிழ்த்த பின்பு, பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் சர்வதேச எல்லை மூடப்பட்டுள்ளது. ஆனாலும் எல்லைப்பகுதி என்பதால் இரு தரப்பினரும் வியாபாரம், வாழ்வாதாரம் உள்ளிட்ட பிற காரணங்களுக்காக எல்லை கடக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
கொல்லப்பட்ட மோகன், அய்யனார் உடல்கள் மியான்மிர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. அவர்களது உடல்களை கொண்டு வர தூதரக ரீதியில நடவடிக்கை எடுக்க வேண்டியதிருக்கிறது. இது தொடர்பாக முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அய்யனார், மோகன் கொல்லப்பட்ட தகவல், மோரேயில் காட்டுத்தீ போல பரவியது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. போலீசார் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.