< Back
உலக செய்திகள்
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் பிடியில் இருந்த மேலும் 2 பேர் விடுவிப்பு
உலக செய்திகள்

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் பிடியில் இருந்த மேலும் 2 பேர் விடுவிப்பு

தினத்தந்தி
|
24 Oct 2023 3:49 AM GMT

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் பிடியில் இருந்த மேலும் 2 பணய கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது கடந்த 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக அடித்து, தாக்கி வன்முறையில் ஈடுபட்டது. இதில், 260 பேர் கொல்லப்பட்டனர்.

210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 18-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. பணய கைதிகளை மீட்கும் முயற்சியும் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் பிடியில் இருந்த மேலும் 2 பணய கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நுரித் கூப்பர் மற்றும் யொகிவத் லிப்ஷிட்ஜ் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

அவர்கள் இருவரும் ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் கொண்டு வரப்பட்டனர். டெல் அவிவ் நகரில் உள்ள இசிலவ் மருத்துவமனையின் மேற்கூரை பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

காசாவில் ஹமாஸின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள் இஸ்ரேல் மருத்துவ மையத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளனர் என செவிலியர் கூறிய தகவல் தெரிவிக்கின்றது. முதியவர்களான அவர்கள் 2 பேரும் குடும்பத்துடன் மீண்டும் ஒன்றிணைந்தபோது உணர்ச்சிவசப்பட்டனர்.

அவர்களிருவருக்கும் மருத்துவ வசதி அளிக்கப்பட்டு வருகிறது. 2 வாரம் பணய கைதிகளாக இருந்த பின்னர் விடுவிக்கப்பட்ட அவர்களுக்கு போதிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுடைய நிலை பற்றி இன்று காலை மருத்துவ அதிகாரிகள் ஒரு முடிவுக்கு வருவார்கள் என்று அந்த செவிலியர் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, ஹமாஸ் பயங்கரவாதிகள் பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றவர்களில் 2 அமெரிக்க பெண்மணிகள் விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் ஜுடித் தை ரானன் மற்றும் அவருடைய 17 வயது மகள், நடாலி ரானன் ஆவர். அமெரிக்காவின் சிகாகோவை சேர்ந்த அவர்கள் இருவரில் ஜுடித்துக்கு உடல்நல பாதிப்பு உள்ளது. அதனால், மனிதநேய அடிப்படையில் அவர்கள் 2 பேரும் விடுவிக்கப்பட்டனர் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்