இலங்கையில் மேலும் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது
|இலங்கையில் இருந்து சென்னை வழியாக குஜராத் வந்தவர்களை மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கொழும்பு,
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 19-ந் தேதி ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்து சென்னை வழியாக குஜராத் வந்தவர்களை மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், குஜராத் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நாசவேலைகளில் ஈடுபட இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் பயங்கரவாத தடுப்பு போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இலங்கை போலீசாருக்கு பயங்கரவாதிகள் தொடர்பான விவரங்களை இந்திய போலீசார் அனுப்பி வைத்தனர்.அதன் அடிப்படையில் 4 பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பிவைக்க இலங்கையின் டெமடகோடா பகுதியைச் சேர்ந்த ஒஸ்மாண்ட் கெரார்டு (வயது 46) என்பவர் உதவியதாக அந்த நாட்டு போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அவரை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் மேலும் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகளை இலங்கை போலீசார் நேற்று கைது செய்தனர். வடமேற்கு பிராந்தியத்தில் உள்ள சிலாபம், பங்கதெனியா நகரங்களை சேர்ந்த 2 பேரை கைது செய்துள்ளதாகவும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர்.