அமெரிக்காவில் 2 மாடல் அழகிகள் அடுத்தடுத்து மர்ம மரணம்; சீரியல் கில்லருக்கு தொடர்பா...?
|அமெரிக்காவில் 2 மாடல் அழகிகள் அடுத்தடுத்து மர்ம மரணம் அடைந்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ்,
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பங்கர் ஹில் பகுதியில் ஆடம்பர ரக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தவர் மலீசா மூனி (வயது 31). மாடல் அழகியான இவர், கடந்த 12-ந்தேதி அவருடைய குடியிருப்பில் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் நடைபெறுவதற்கு 2 நாட்களுக்கு முன், கடந்த 10-ந்தேதி நிக்கோல் கோட்ஸ் (வயது 32) என்பவர் அவருடைய குடியிருப்பில் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த இரண்டு சம்பவங்களை பற்றியும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது கொலையாக இருக்க கூடும் என்று நிக்கோலின் உறவினரான மே ஸ்டீவன்ஸ் கூறியுள்ளார். அவருடைய ஒரு கால், உதைப்பது போன்று மேல்நோக்கி இருந்துள்ளது. இது அவருடைய மரணத்தில் பெரிய சந்தேகம் கிளப்பி உள்ளது.
இது படுகொலை என்ற கோணத்தில் போலீசாரின் விசாரணை நடைபெறவில்லை என்றபோதிலும், மகள் மரணத்தில் தொடர்புடையவர்கள் ஒவ்வொருவரையும் கண்டுபிடிக்க வேண்டும் என்று நிக்கோலின் தாயார் ஷரோன் கோட்ஸ் கூறியுள்ளார்.
இருவரின் உறவினர்களும், இதனை ஒரு சீரியல் கில்லர் செய்திருக்க வேண்டும் என்று சந்தேகம் தெரிவித்து உள்ளனர். அடுத்து, வேறு யாரும் இதற்கு இலக்காக கூடிய சாத்தியமும் உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த இருவரும் ஒரு மைல் தொலைவுக்கு இடைப்பட்ட இடத்தில் தங்கியிருந்து உள்ளனர். இதனால், சீரியல் கில்லரின் தொடர்பு பற்றியும் போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.