< Back
உலக செய்திகள்
கனடாவில் விமானம் விழுந்து நொறுங்கி இந்திய பயிற்சி விமானிகள் பலி
உலக செய்திகள்

கனடாவில் விமானம் விழுந்து நொறுங்கி இந்திய பயிற்சி விமானிகள் பலி

தினத்தந்தி
|
9 Oct 2023 3:45 AM IST

கனடாவில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் இந்திய பயிற்சி விமானிகள் இருவர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

மராட்டியத்தை சேர்ந்தவர்கள்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் லாங்லியில் ஸ்கைகுவெஸ்ட் ஏவியேஷன் என்ற விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி மையம் செயல்படுகிறது. இங்கு இந்தியரான அபய் காத்ரு (வயது 25) என்பவர் விமானி பயிற்சிக்காக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்றிருந்தார். இவருடன் யாஷ் ராமுகடே என்ற மற்றொரு இந்தியரும் அங்கு பயிற்சி பெற்று வந்தார். இவர்கள் இருவருமே மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

நொறுங்கிய விமானம்

இந்தநிலையில் சம்பவத்தன்று விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியின்போது இவர்களுடன் சேர்த்து 3 பேர் பைபர் பி.ஏ-34 செனிகா என்ற சிறிய ரக விமானத்தில் இருந்தனர். பிரிட்டிஷ் கொலம்பியா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர்கள் சில்லிவாக் விமான நிலையம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் அந்த விமானம் கீழே விழுந்து சுக்குநூறாக நொறுங்கியது.

உடலை தாயகம் கொண்டு வர...

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 3 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். இதுகுறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே விபத்தில் உயிரிழந்த இந்திய பயிற்சி விமானிகளின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் கனடா அரசாங்கம் இறங்கி உள்ளது.

மேலும் செய்திகள்