< Back
உலக செய்திகள்
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழப்பு
உலக செய்திகள்

ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழப்பு

தினத்தந்தி
|
19 April 2024 2:45 PM IST

மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

லண்டன்:

ஸ்காட்லாந்தின் பெர்த்ஷயரில் ஆறுகள் சங்கமிக்கும் வனப்பகுதியான லின் ஆப் டம்மெல் என்ற இடத்திற்கு நேற்று முன்தினம் மாலை, சிலர் உல்லாச பயணம் மேற்கொண்டனர். அங்கு சென்றதும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அப்போது, இந்தியாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் திடீரென தவறி ஆற்றில் விழுந்து மூழ்கினர்.

இதுபற்றி உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு மாணவர்களையும் சடலமாக மீட்டனர். அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

விசாரணையில் அவர்கள் இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஸ்காட்லாந்தில் உள்ள டண்டீ பல்கலைக்கழகத்தில் படித்து வந்ததும் தெரியவந்தது. மாணவர்கள் மறைவு குறித்த தகவலை லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் மறைவுக்கு தூதரகம் தரப்பிலும், பல்கலைக்கழகம் தரப்பிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிரேத பரிசோதனை நிறைவடைந்ததும், மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்