ஆன்லைன் வழியாக ரூ.10 கோடி மோசடி: அமெரிக்காவில் 2 இந்தியர்களுக்கு 41 மாதம் சிறை
|அமெரிக்காவில் ஆன்லைன் வழியாக ரூ.10 கோடி மோசடி செய்த 2 இந்தியர்களுக்கு 41 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் உள்ள வயதானவர்களை குறிவைத்து அரசு நிறுவனங்களிடம் இருந்து வரும் செல்போன் அழைப்புகள் மூலம் ஆன்லைன் வழியாக பணமோசடி நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் எழுந்தன.
அதன்பேரில் சைபர்-கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். புகாரின் பேரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 இளம்பெண்கள் கைது செய்யப்பட்டனர். அருஷோபிகே மித்ரா (வயது 29) மற்றும் கர்பிதா மித்ரா(25) ஆகியோர் அமெரிக்க கோர்ட்டில் நிறுத்தப்பட்டனர்.
அவர்கள், எப்.பி.ஐ, அமலாக்கத்துறை மற்றும் வங்கி அதிகாரிகள் போல பேசி முதியோரை ஏமாற்றி பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறாக பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ரூ.10 கோடிவரை சட்டவிரோதமாக பெற்று ஏமாற்றியதை நீதிபதி முன்பாக ஒப்புக்கொண்டனர். இதன்பேரில் அவர்கள் 2 பேருக்கும் 41 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.