வானவில் நிறத்தில் 'கம்மல்' அணிந்த பெண்ணுக்கு சிறை - காரணம் என்ன?
|வானவில் நிறத்திலான கம்மல் அணிந்த பெண்ணுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ,
ரஷியாவில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் அதன் ஆதரவு செயல்பாடுகளுக்கு அந்நாட்டு கோர்ட்டு தடை விதித்துள்ளது. குறிப்பாக, கடந்த நவம்பர் மாதம் உத்தரவில் தன்பாலின ஈர்ப்பு ஆதரவு அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகள் என கோர்ட்டு அறிவித்துள்ளது. தன்பாலின ஈர்ப்பு ஆதரவு அமைப்புகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ரஷிய அரசு ஈடுபட்டு வருகிறது.
அதேபோல், தன்பாலின ஈர்ப்பை ஆதரிக்கும் வகையிலான வானவில் நிற கொடி, அது தொடர்பான பொருட்கள், புகைப்படங்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வானவில் நிறத்தில் கம்மல் (காதணி) அணிந்த பெண்ணுக்கு ரஷிய கோர்ட்டு சிறை தண்டனை விதித்துள்ளது. ரஷியாவின் நிஸ்னி நவ்ஹொராட் பகுதியை சேர்ந்த அனஸ்டசியா எர்ஷொவா பொது இடத்தில் வானவில் நிறத்திலான கம்மல் அணிந்துள்ளார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் கடந்த வாரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். விசாரணை நடத்திய கோர்ட்டு எர்ஷொவாவுக்கு 5 நாட்கள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேபோல், சரடொவ் பகுதியை சேர்ந்த புகைப்பட கலைஞர் இனா மொசினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வானவில் நிற கொடி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். வானவில் நிற கொடி தன்பாலின ஆதரவாளர்களின் கொடி என்பதால் இனா மொசினா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இனா மொசினா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டபோது, தான் நிரபராதி என அவர் வாதிட்டார். மேலும், தன்பாலின ஈர்ப்பு ஆதரவு அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகள் என அறிவிப்பதற்கு முன்பாகவே வானவில் நிற கொடி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டேன். இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லை என்றும் மொசினா வாதிட்டார்.
ஆனால், இருதரப்பு வாதத்தையும் கேட்ட கோர்ட்டு மொசினாவுக்கு 1,500 ரூபெல் (இந்திய மதிப்பில் 1,357 ரூபாய்) அபராதம் விதித்தது. இதையடுத்து, வழக்கை முடித்துவைத்த கோர்ட்டு மொசினாவை விடுதலை செய்தது.