சீனா: சாலையில் திடீர் பள்ளம் - 19 பேர் பலி
|சீனாவில் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளமானது 184.3 சதுர மீட்டர் அளவை கொண்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பீஜிங்,
தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 2.10 மணியளவில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த சாலையில் சென்று கொண்டிருந்த 18 வாகனங்கள் அடுத்தடுத்து பள்ளத்தில் சிக்கின. இந்த விபத்தில் 19 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் பற்றி போலீசார் மாற்றும் மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 500க்கும் மேற்பட்ட மீட்புப்படையினர் பள்ளத்தில் காயங்களுடன் கிடந்த 30 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த பள்ளமானது 184.3 சதுர மீட்டர் அளவை கொண்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த பள்ளத்தால் அப்பகுதியில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் கனமழைக்கு பின் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.