மெக்காவில் வெப்ப தாக்கத்திற்கு ஹஜ் யாத்ரீகர்கள் 19 பேர் பலி
|சவுதி அரேபியாவில் வெப்ப அலையால், ஜோர்டானை சேர்ந்த 14 யாத்ரீகர்கள் மற்றும் ஈரானை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்து உள்ளனர்.
ரியாத்,
சவுதி அரேபியாவின் மெக்கா நகருக்கு உலகம் முழுவதும் இருந்து மக்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். நடப்பு ஆண்டில், 18 லட்சம் யாத்ரீகர்கள் சவுதிக்கு பயணம் மேற்கொள்வார்கள் என அந்நாட்டுக்கான புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.
எனினும், இந்த ஆண்டில் சவுதி அரேபியாவில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. மெக்காவில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி உள்ளது. இதனால், புனித பயணம் மேற்கொள்பவர்கள், அதிக வெப்ப சூழலில் நீர்ச்சத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
வெப்ப தாக்கத்தினை எதிர்கொள்ள கூடிய வகையிலான மருத்துவ குழுவினர் உள்பட 1,600 ராணுவ வீரர்களை சவுதி ராணுவம் அனுப்பியுள்ளது.
இதேபோன்று, 30 அதிரடி விரைவு குழுவினரும், 5 ஆயிரம் சுகாதார மற்றும் முதலுதவி தன்னார்வலர்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
சவுதியில் வெப்ப அலையால், ஜோர்டானை சேர்ந்த 14 யாத்ரீகர்கள் மற்றும் ஈரானை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனை ஜோர்டானின் வெளியுறவு அமைச்சகமும், ஈரானின் செம்பிறை அமைப்பும் உறுதிப்படுத்தி உள்ளன.
இதனை தொடர்ந்து, ஜெட்டாவில் உள்ள சவுதி அதிகாரிகளிடம் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அவர்களின் உடல்களை ஜோர்டானுக்கு திரும்ப கொண்டு வருவதற்கான பணிகளை ஜோர்டான் மேற்கொண்டு வருகிறது.