18 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் - 'அமேசான்' அறிவிப்பால் ஊழியர்கள் பீதி
|அமேசான் நிறுவனம் ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.
வாஷிங்டன்,
கொரோனா பெருந்தொற்று முடக்கம், பணவீக்கம் போன்றவற்றால் பல்வேறு நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இதனை சமாளிக்க அந்த நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
அந்தவகையில் உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கிய உடனே 3 ஆயிரத்து 700 பேரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார். அதனையடுத்து மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்தன.
இந்த நிலையில் புது வருடத்தில் அமேசான் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 18 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர் என்பதுதான் அந்த அறிவிப்பு. இது அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அமேசான் நிறுவனம் ஏற்கனவே கடந்த நவம்பர் மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.