ஜப்பானில் பயிற்சியின்போது 3 ராணுவ அதிகாரிகள் சுட்டுக் கொலை
|ஜப்பானில் ராணுவ பயிற்சியின்போது 3 ராணுவ அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் பயிற்சிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
டோக்கியோ,
மத்திய ஜப்பானின் கிபு மாகாணத்தில் ராணுவத்தின் தரைப்படை பிரிவு வீரர்கள் 120 பேர் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அங்குள்ள ஹினோ கிஹோன் துப்பாக்கிச்சூடு பயிற்சி தளத்தில் புதிதாக சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது.
இதில் கடந்த ஏப்ரல் மாதம் ராணுவத்தில் சேர்ந்த 18 வயது வீரர் ஒருவருக்கு துப்பாக்கிச்சூடு பயிற்சி அளிப்பதற்காக ராணுவ அதிகாரிகள் 3 பேர் நியமிக்கப்பட்டு இருந்தனர். அதன்படி கடந்த சில நாட்களாக அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அதில் ஒரு ராணுவ அதிகாரியுடன் 18 வயது வீரருக்கு தகராறு ஏற்பட்டுள்ளது.
ராணுவ வீரர் கைது
இந்தநிலையில் நேற்றும் வழக்கம்போல் பயிற்சி நடந்தது. அப்போது அந்த ராணுவ அதிகாரியை நோக்கி திடீரென அந்த வீரர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அதனை தடுக்க முயன்ற 2 வீரர்களும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்களும் உயிரிழந்தனர். இதனால் அந்த பயிற்சி ராணுவ வீரரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீவிர நடவடிக்கை
இதுகுறித்து ஜப்பானின் ராணுவ தளபதி யசுனோரி மொரிஷிதா கூறுகையில், ஆயுதங்களை கையாளும் அமைப்பு இது போன்ற ஒரு சம்பவத்தை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. எனவே இந்த சம்பவத்தில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிமருந்து சம்பந்தப்பட்ட பயிற்சிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.