< Back
உலக செய்திகள்
பாகிஸ்தான் சிறையில் பக்ரீத் தொழுகையின்போது 17 கைதிகள் தப்பியோட்டம் - துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு
உலக செய்திகள்

பாகிஸ்தான் சிறையில் பக்ரீத் தொழுகையின்போது 17 கைதிகள் தப்பியோட்டம் - துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

தினத்தந்தி
|
30 Jun 2023 9:06 PM GMT

பாகிஸ்தானில் சிறைச்சாலையில் நடைபெற்ற பக்ரீத் தொழுகையின்போது 17 கைதிகள் தப்பி ஓடினர்.

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் சாமன் நகரில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு பயங்கரவாதிகள், தண்டனை கைதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறைச்சாலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் கைதிகள் பலர் கலந்து கொண்டு தொழுகை செய்தனர்.

ஆனால் கைதிகள் சிலர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தப்பிக்க திட்டமிட்டு உள்ளனர். அதன்படி தொழுகை நடைபெற்ற சமயத்தில் சில கைதிகள் சிறையில் இருந்து ஏறி குதித்து தப்பிக்க முயற்சி செய்தனர். இதனையறிந்த சிறை காவலர்கள் அவர்களை தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் சிறை காவலர்களுக்கும், கைதிகளுக்கும் இடையே மோதல் நடந்தது. அப்போது ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டது. மேலும் காவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒரு கைதி உயிரிழந்தார்.

இதற்கிடையே இந்த குழப்பமான சூழ்நிலையை பயன்படுத்தி 17 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர். அவர்கள் தப்பி செல்வதற்கு வெளியில் இருந்து சிலர் உதவி உள்ளனர். தப்பி ஓடிய கைதிகளில் சிலர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சமன் சிறைச்சாலையானது ஈரான் நாட்டின் எல்லை அருகே அமைந்துள்ளது. எனவே கூட்டாளிகளின் உதவியுடன் இவர்கள் அங்கு தப்பி ஓடி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்காக சிறையில் இருந்து தப்பிய கைதிகளின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. எனவே அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்