< Back
உலக செய்திகள்
அமெரிக்காவில் குருத்வாராக்கள் மீது தாக்குதல்: சீக்கியர்கள் 17 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது
உலக செய்திகள்

அமெரிக்காவில் குருத்வாராக்கள் மீது தாக்குதல்: சீக்கியர்கள் 17 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கைது

தினத்தந்தி
|
19 April 2023 3:22 AM IST

அமெரிக்காவில் குருத்வாராக்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக சீக்கியர்கள் 17 பேரை போலீசார் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்தனர்.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந் தேதி ஸ்டாக்டனில் உள்ள சீக்கிய குருத்வாராவிலும், கடந்த மார்ச் 23-ந் தேதி சாக்ரமென்டோவில் உள்ள குருத்வாராவிலும் தொடர் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர். மேலும் இந்த சம்பவங்களால் அங்கு சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் வடக்கு கலிபோர்னியாவின் 20 இடங்களில் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் குருத்வாரா துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய 17 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் பெரும்பாலானோர் உள்ளூர் சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்

மேலும் இவர்களிடம் இருந்து ஏ.கே-47, கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட 42 பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கலிபோர்னியா மாகாண அட்டார்னி ஜெனரல் ராப் போண்டா தெரிவித்தார். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரால் கைது செய்யப்பட்ட 17 குற்றவாளிகளில் 2 பேர் இந்தியாவில் பல கொலைகளை செய்து விட்டு தலைமறைவாகி உள்ள மாபியா கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்கள் அமெரிக்காவிலும், சட்டர், சாக்ரமென்டோ, சோலானோ உள்ளிட்ட இடங்களிலும் கொலை முயற்சி, துப்பாக்கி சூடு உள்ளிட்ட பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்