மெக்சிகோவில் அகதிகள் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 16 பேர் பலி
|மெக்சிகோவில் அகதிகள் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 29 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
தீவிர சோதனை
அமெரிக்காவுக்கு செல்ல விரும்பும் அகதிகள் பெரும்பாலும் மெக்சிகோ வழியாகவே செல்கின்றனர். எனவே மெக்சிகோ எல்லையில் அதிகாரிகளின் தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அங்கு அனுமதிக்கப்படுகின்றன. மேலும் முறையானஆவணங்கள் இல்லாதவர்களுக்கு அங்கு பஸ் டிக்கெட்டும் வழங்கப்படுவது இல்லை. இதனால் அவர்கள் பெரும்பாலும் சட்ட விரோதமாக லாரிகள், சரக்கு ரெயில்கள் போன்றவற்றில் பயணிக்கின்றனர்.
கட்டுப்பாட்டை இழந்த பஸ்
சிலசமயங்களில் மோசமான நிலையில் உள்ள பஸ்களை வாடகைக்கு எடுத்து அதில் செல்கின்றனர். இது பல நேரங்களில் ஆபத்தான பயணமாக முடிகின்றது. அதன்படி ஒரு பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட அகதிகள் அமெரிக்காவுக்கு சென்று கொண்டிருந்தனர். தெற்கு மாகாணமான ஓக்சாக்காவில் உள்ள நெடுஞ்சாலை அருகே சென்றபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டோடியது.
29 பேர் படுகாயம்
இதனையடுத்து மீட்பு படையினர் அங்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 16 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 29 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து மெக்சிகோவின் தேசிய குடியேற்ற நிறுவன அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அந்த அகதிகள் அனைவரும் வெனிசுலா மற்றும் ஹைதி நாட்டில் இருந்து வந்ததாக தெரிவித்தனர்.