< Back
உலக செய்திகள்
ரஷியாவின் தாக்குதலில் 155 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலி
உலக செய்திகள்

ரஷியாவின் தாக்குதலில் 155 உக்ரைன் ராணுவ வீரர்கள் பலி

தினத்தந்தி
|
21 Oct 2023 11:02 PM IST

ரஷியா நடத்திய சரமாரி தாக்குதலில் உக்ரைனின் 155 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

பதிலடி தாக்குதல்

நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்றதால் உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா போர் தொடுத்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த போரானது 20 மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார உதவியால் போரில் உக்ரைனும் பதிலடி தாக்குதல் நடத்துகின்றது. இந்த போரை நிறுத்தும்படி ஐ.நா.சபை மற்றும் உலக நாடுகள் பலவும் வலியுறுத்தி வருகின்றன. எனினும் போர் முடிவுக்கு வந்தபாடில்லை.

தாக்குதலை தீவிரப்படுத்த உத்தரவு

சமீப காலமாக உக்ரைனின் பகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரமாக களமிறங்கி உள்ளது. எனவே தாக்குதலை தீவிரப்படுத்தும்படி ராணுவத்தினருக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இதனால் உக்ரைனுக்கு சொந்தமான குபியன்ஸ்க், லைமன் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான கிரிவ்யிரி மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.

கட்டிடங்கள் சேதம்

குடியிருப்பு பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் முதியவர் உள்பட இருவர் கொல்லப்பட்டனர். பல வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. அதேபோல் டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள ராணுவ முகாம் மீது டிரோன் தாக்குதல் மற்றும் பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த 155 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷிய ராணுவ செய்தித்தொடர்பாளர் வாடிம் அஸ்டாபியேவ் கூறினார். எனினும் உக்ரைன் தரப்பில் இதுகுறித்து எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்