துபாயில் மீண்டும் கனமழை... விமான சேவை ரத்து
|துபாயில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் 15 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
துபாய்,
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த மாதம் வரலாறு காணாத கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்பட்டன. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து, விமான சேவைகள் முடங்கின.
இந்த நிலையில், இரண்டு வாரங்களுக்கு பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.
அங்கு இன்றும், நாளையும் கனமழை பெய்ய கூடும் என தேசிய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. குடியிருப்புவாசிகள், வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.
பூங்காக்கள், பீச்சுகள் ஆகியவை தற்காலிக அடிப்படையில் மூடப்பட்டு உள்ளன. தேவையின்றி வாகன பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், போக்குவரத்து வசதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் 15 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 5 விமானங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.