ஹமாஸ் தாக்குதலில் இங்கிலாந்து நாட்டினர் 12 பேர் பலி; ரிஷி சுனக்
|ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். 5 பேரை இன்னும் காணவில்லை.
லண்டன்,
இஸ்ரேல் மீது கடந்த 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என சிக்கியவர்களை கடுமையாக அடித்து, தாக்கி வன்முறையில் ஈடுபட்டது. இதில், 260 பேர் கொல்லப்பட்டனர்.
210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 19-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. பணய கைதிகளை மீட்கும் முயற்சியும் நடந்து வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர். 5 பேரை இன்னும் காணவில்லை என்று கூறியுள்ளார்.
இதுபற்றி சுனக் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஜிகாத்துக்கான அழைப்பு யூத சமூகத்திற்கான அச்சுறுத்தல் என்பதோடு நம்முடைய ஜனநாயக மதிப்புகளுக்கும் விடப்பட்ட அச்சுறுத்தல். நம்முடைய நாட்டில் யூதர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் செயலை நாம் சகித்து கொள்ள முடியாது என தெரிவித்து உள்ளார்.
பயங்கரவாதத்திற்கு எதிராக அனைத்து தேவையான நடவடிக்கைகளையும் போலீசார் எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில், இங்கிலாந்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தொடர்ந்து நடந்த நிலையில் யூத எதிர்ப்புக்கு எதிராக சுனக் குரலெழுப்பியுள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் தாக்குதலையடுத்து, கடந்த வாரம் இஸ்ரேலுக்கு ரிஷி சுனக் பயணம் மேற்கொண்டார். அப்போது, இதுபோன்ற பயங்கர சூழலில், இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதற்காக வருந்துகிறேன். ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிராக போராடுவதற்கும், சர்வதேச சட்டத்தின் வழியில் இஸ்ரேல், தன்னை தற்காத்து கொள்வதற்கான உரிமைக்கும் எங்களுடைய முழு ஆதரவை வழங்குகிறோம் என்று கூறினார்.
அந்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரால் பாலஸ்தீன மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என அவர் பேசினார்.